பேராயர் இனவாதியென்றால் இரத்த ஆறு ஓடியிருக்கும்: மங்களமீது விமல் பாய்ச்சல்

Report Print Ajith Ajith in அரசியல்

“ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இனவாதியாக இருந்திருந்தால் இந்நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்திருக்கும்.’’ என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி. சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிட்ட விமல்வீரவன்ஸ,

“ 21/4 தாக்குதலின் பின்னர் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவும், இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவர்தான் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.

அவர் இனவாதியாக இருந்திருந்தால் 21/4 தாக்குதலுக்கு பின்னர் இந்த நாட்டில் இரத்தஆறு பெருக்கெடுத்து ஓடியிருக்கவேண்டும். ஆனால், பொறுமையாகவும், நிதானமாகவும் செயற்பட்டு மக்களை நல்வழிப்படுத்தினார்.

இப்படிபட்ட ஒரு தலைவரை நிதி அமைச்சர் மங்கள சமரவீர, தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலிய ரதன தேரரை, சந்திப்பதற்கு பேராயர் சென்றமையானது இனவாதத்தை தூண்டும் செயலென அவர் குறிப்பிட்டுள்ளார். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என்பதுடன், பேராயருக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.” என்று விமல்வீரவன்ஸ குறிப்பிட்டார்.

அத்துடன், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் அறிவிப்பு, அரசாங்கத்தின் நிலைப்பாடா என்றும் வினவினார். இதற்கு பதிலளித்த சபை முதல்வரான லக்‌ஷ்மன் கிரியல்ல

“ இக்கேள்விக்கு அமைச்சர் மங்கள சமரவீர பதிலளிப்பார். எனினும், மகாநாயக்க தேரர்கள் உட்பட மதத் தலைவர்களுக்கு மதிப்பளிக்க அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ளவேண்டும்.’’ என்றார்.

Latest Offers