பேரினவாதிகளுக்கு கடிவாளம் பூட்டவும்! வேலுகுமார் எம்.பி

Report Print Ajith Ajith in அரசியல்

முஸ்லிம் சமூகத்தை கூண்டோடு வேட்டையாடத் துடிக்கும் பேரினவாத சக்திகளுக்கு அரசாங்கம் உடனடியாக கடிவாளம் பூட்டவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நாடு மீண்டும் அதலபாதாளத்தை நோக்கியே பயணிக்கும் நிலை உருவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக பதவி விலகியமை தொடர்பில் வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

நாட்டின் நலனையும், சமூகத்தின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்டுள்ள முடிவை இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர்.

இப்பிரச்சினையை பெரிதுப்படுத்தி முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் அரசியல் கண்காட்சிகளை நடத்தியிருக்க முடியும்.

அவ்வாறு செய்திருந்தால் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடியிருக்கும். எனவே, முஸ்லிம் அரசியல் வாதிகளின் இந்த விட்டுக்கொடுப்பை எவரும் பலவீனமாக கருதக்கூடாது.

நாட்டில் தற்போது நடைபெறும் சில சம்பவங்களை பார்க்கும் போது இந்த நாட்டை ஆள்வது அரசியல்வாதிகளா அல்லது பேரினவாதிகளா என்ற சந்தேகம் எழுகின்றது.

அதுமட்டுமல்ல நாட்டுக்கென அரசமைப்பு மற்றும் சட்டம் இருக்கையில், எதற்காக அழுத்தங்களுக்கு பணியும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன?

முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் அடிப்படைவாதிகள் இருக்கலாம். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு தனியாக களையெடுக்க முடியும்.

மாறாக ஒரு சிலருக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் வதைக்க முயன்றால் அது பாதகமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதேவேளை, முஸ்லிம்களைத்தானே சீண்டுகின்றனர். நமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையே என சிறுபான்மை இனத்திலுள்ள சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

இன்று முஸ்லிம் சமூகத்தின் கழுத்தில் வைக்கப்பட்டுள்ள பேரினவாதம் என்ற கத்தி நாளை தமிழர்களின் கழுத்திலும் வைக்கப்படலாம்.

எனவே, பேரினவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து, தம்மைபாதுகாத்து கொள்வதற்காக சிறுபான்மையின மக்கள் ஓரணியில் திரளவேண்டும்.

அதேபோல், பேரினவாதிகளை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் மீது கைவைத்தால் நாட்டில் பிரச்சினை தலைதூக்கும் என நினைத்து அரசாங்கம் மௌனம் காக்குமானால், நாட்டுக்கு வளமானதொரு எதிர்காலம் இல்லை என்றே கூறவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.