சிரமமான நேரத்தில் நட்பு நாடுகளுக்கு உதவுவது கடமை: மோடி

Report Print Steephen Steephen in அரசியல்

சிரமமான நேரங்களில் கைவிடாது ஒருவருக்கு ஒருவர் உதவுவதே சகோதர மற்றும் நட்பு நாடுகளின் கடமை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இன்று விஜயம் செய்திருந்த மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும், இலங்கை மீது கொண்டுள்ள நம்பிக்கை தொடர்ந்தும் அப்படியே இருக்கும் எனவும் மோடி கூறியுள்ளார்.

இரு தரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது, பிராந்திய பாதுகாப்பு மட்டுமல்லாது ஸ்திரத்தன்மை தொடர்பாக இருத்தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையும், இந்தியாவும் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான நாடுகள், எந்த வகையிலான பயங்கரவாத தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த தலைவர்கள், பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்புகளை முன்னேற்றவும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகி, நாட்டிற்குள் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு வந்து, உலகத்திற்கு வழங்கிய செய்திக்கு நன்றி தெரிவிப்பதாக மைத்திரிபால சிறிசேன, மோடியிடம் கூறியுள்ளார்.

நட்புக்குரிய அயல் நாடுகளான இலங்கை மற்றும் இந்தியா இடையில், வலுவானதும், நம்பிக்கையானதுமான தொடர்புகளை இந்திய பிரதமரின் விஜயம் மேலும் உறுதிப்படுத்தியது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமரின் இந்த விஜயமானது இலங்கையின் பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறைகளின் நன்மைக்கு வழிவகுக்கும் எனவும் இலங்கை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers