தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்படும் வரை அமைச்சரவைக் கூட்டப்பட மாட்டாது : ஜனாதிபதி காட்டம்

Report Print Satha in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டமாட்டார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெரிவுக்குழு விசாரணையை நிறுத்துவதற்கு நாடாளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டதாலேயே மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டமாட்டார் என கூறப்படுகின்றது.

கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்படும்வரை தான் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டப்போவதில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

தெரிவுக்குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று தெரிவுக்குழு உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனவே, இந்த விடயத்தில் நாடாளுமன்றமே இறுதி முடிவெடுக்கவேண்டும் என சபாநாயகர் அறிக்கை மூலம் அறிவிப்பு விடுத்தார்

ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் செவ்வாய்க்கிழமையே நடத்தப்படும்.

எனினும், இம்முறை வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என்றும், அதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுக்கவில்லை என்றும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.