இந்த நாட்டை பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் இல்லை! இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

Report Print Thirumal Thirumal in அரசியல்

இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டை பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் இல்லை என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த நாட்டை நேசிக்கின்ற இந்த நாட்டை பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டகலையில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இந்த நாட்டிற்கு அண்மைக்காலங்களில் நாட்டை பற்றி சிந்திக்கின்ற, இந்த நாட்டை நேசிக்கின்ற ஒரு தலைவர் உருவாகவில்லை.

சுதந்திரத்தின் பின்பு பல தலைவர்கள் உருவானார்கள். ஆனால் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாசவிற்கு பின்பு அப்படி ஒரு தலைவர் உருவாகவில்லை.

அவர் இந்த நாட்டைப்பற்றி சிந்தித்ததோடு இந்த நாட்டையும் நேசித்தார். அதே நேரத்தில் கீழ் மட்ட மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

ஆனால் அவருக்கு பின்பு அப்படி ஒரு தலைவர் உருவாகவில்லை. எனவே அடுத்த நடைபெறவுள்ள தேர்தலில் ஒரு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு இந்த மக்களிடம் இருக்கின்றது.

அதேநேரத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு தின சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் இந்த குழு தொடர்பாக சந்தேகம் எழுப்பியிருக்கின்றார். எனவே இந்த தெரிவுக்குழு விசாரணைகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த தெரிவுக்குழு தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் .எனவே இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டும்.

மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமருக்கு இடையிலான ஒரு முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதை உணர முடிகின்றது.

இது ஆரோக்கியமான ஒரு செயற்பாடு அல்ல. இதனை முடிவிற்கு கொண்டு வந்து இருவரும் இணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும்.

இல்லாவிட்டால் மீண்டும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers