சபாநாயகர் மீது விஜேதாஸ ராஜபக்சவிற்கு எழுந்துள்ள சந்தேகம்

Report Print Sujitha Sri in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக அரச புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இப்போது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல் ஆரம்பித்துவிட்டது. ஜனாதிபதியின் பிரதான பொறுப்புதான் அரச அதிகாரிகளை பாதுகாத்தலாகும்.

அரச புலனாய்வு பிரிவின் அதிகாரிகளின் அடையாளம் மற்றும் புலனாய்வுப் பிரிவினால் தேடப்பட்டு பெறப்பட்ட தகவல்களை பாதுகாத்தலும் அவருடைய பொறுப்பாகும்.

ஜனாதிபதி இந்த அரச புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அல்லது அரச அதிகாரிகள் சேவையிலிருந்து சென்ற அல்லது ஓய்வு பெற்ற அதிகாரியை புலனாய்வு தகவல்களை அம்பலப்படுத்துவதற்காக ஓரிடத்திற்கு அனுப்புவாராயின் சட்டத்தை மீறுகின்ற செயலாகும்.

தெரிவுக்குழு அல்லது வேறு குழு உறுப்பினர்கள் புலனாய்வாளர்களை அழைப்பார்களாயின் அதுவும் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

இந்த விடயங்களை பார்க்கும்போது பிரதமர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கொந்தராத்துக்களை சபாநாயகர் நிறைவேற்றுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சபாநாயகருக்கு அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் தொடர்பிலான சரியான விளக்கம் இல்லை என்றுதான் தெரிகிறது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு முன்பாக அதிகாரிகள் விசாரணைக்கு வராவிட்டால் அது சட்டத்தை மீறும் செயல் என்று சபாநாயகர் கூறியிருப்பதிலிருந்து அவருக்கு இந்த பலவீனம் இருப்பது உறுதியாகின்றது என தெரிவித்துள்ளார்.