இரண்டு மணிக்கு கூடுகிறது தெரிவுக்குழு: இலங்கை அரசியலில் நெருக்கடி

Report Print Rakesh in அரசியல்

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூடுகின்றது.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல் மெளலவி ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கவுள்ளனர்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையை அடியோடு நிராகரித்து இன்று தெரிவுக்குழு கூடுகின்றது. இதனால் அரசியல் நெருக்கடி ஏற்படும் நிலைமை தோன்றியுள்ளது.

நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை ஜனாதிபதி இடைநிறுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்ற செயற்பாடுகளில் தலையிட முடியாது எனவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அதியுயர் சபையான நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் அலுவலகம் கடந்த 8ஆம் திகதி சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டிடத்தக்கது.