நாங்கள் தேர்தலுக்கே செல்லவிருந்தோம்! பந்துல குணவர்தன

Report Print Sujitha Sri in அரசியல்

நாங்கள் நேரடியாக ஆட்சியை கைப்பற்ற செல்லவில்லை, மாறாக தேர்தலுக்கே செல்லவிருந்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொருளாதார பிரிவு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பிரபலமான எதிர்க்கட்சியினால் ஜனவரி ஐந்தாம் திகதி தேர்தல் நடத்துவதற்கான அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த வருடத்தில் பலமான அழுத்தங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைபெற்றிருந்தால் இந்த பிரச்சினைகள் எல்லாமே இருந்திருக்காது.

அதற்காகவே மஹிந்த ராஜபக்ச மிகவும் தீர்க்கமான நிலையில் தனது கழுத்தை கொடுத்தார். இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நாங்கள் நேரடியாக ஆட்சியைக் கைப்பற்ற செல்லவில்லை. மாறாக தேர்தலுக்கே செல்லவிருந்தோம்.

கடந்த ஜனவரி ஐந்தாம் திகதி ஜனநாயக ரீதியில் தெரிவுகளை செய்வதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்க முன்வந்திருந்தோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான பொறுப்புக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்தவர்களே ஏற்க வேண்டும்.

அதற்காகவே நாங்கள் தேர்தலுக்கான சந்தர்ப்பத்தை வழங்க வலியுறுத்துகிறோம்.

கடந்த ஆண்டில் உடனடியாக ஜே.வி.பியினரால் கடிதமொன்று அவசர அவசரமாக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

உடனடியாக அது கலந்துரையாடப்படாமலும் ஒழுங்கு புத்தகத்தில் சேர்க்கப்படாமலும் விவாதத்திற்கு எடுக்கப்படாமலும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு சபாநாயகரினால் குரல் மூலம் அறிவிப்பும் விடுக்கப்பட்டது.

அவ்வாறு அன்று இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இன்று வரையிலான பிரச்சினைகள் எதுவும் எழுந்திருக்காது என தெரிவித்துள்ளார்.