முஸ்லிம் அமைச்சர்களுக்காக பதில் அமைச்சர்கள் நியமிப்பது அரசியல் அமைப்பிற்கு முரணானது!

Report Print Kamel Kamel in அரசியல்

முஸ்லிம் அமைச்சர்களுக்காக பதில் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது அரசியல் அமைப்பிற்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முஸ்லிம் அமைச்சர்கள் தாங்கள் வகித்து வந்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.

இவ்வாறு பதவி விலகியதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் சிலவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இவ்வாறு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமையானது அரசியல் அமைப்பிற்கு முரணானது என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் அமைச்சர் ஒருவர் வெளிநாட்டு விஜயம் மேற்கொள்ளும் போதும், சுகவீனமுற்று காரியாலயத்திற்கு வருகை தர முடியாத போதிலும் மட்டுமே ராஜாங்க அல்லது பிரதி அமைச்சர்களை பதில் அமைச்சர்களாக நியமிக்க முடியும் என சிரேஸ்ட சட்டத்தரணி அனுர செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள காரணத்தினால் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் நிலையில் பதில் அமைச்சர் ஒருவரை நியமிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.