ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஜனாதிபதியே சீனாவுக்கு விற்றார் - அத்துரலியே ரதன தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தை விற்பனை செய்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது பொய்யான குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் துறைமுகத்தை விற்பனை செய்தமைக்கு அரசாங்கத்தில் உள்ள அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் நான் ஜனாதிபதியை சந்தித்து பேசினேன். துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கினால், இந்தியா கோபித்துக்கொள்ளும், அமெரிக்கா இதனை விரும்பாது என்று ஜனாதிபதியிடம் கூறினேன்.

குறைந்தது 49 வீத பங்கு இலங்கைக்கும் 51 வீத பங்கு சீனாவுக்கும் இருந்தால், இலங்கைக்கு அதில் ஒரு பலம் இருக்கும் என்று சுட்டிக்காட்டினேன். ஜனாதிபதியும் இது சிறந்த யோசனை எனக் கூறினார். அப்போது அங்கு சீனத்தூதுவர் வந்தார். ஜனாதிபதி அவருடன் பேசிய பின்னர், நான் மீண்டும் ஜனாதிபதி சந்தித்தேன். சீனத்தூதுவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார். ஆனால் மறுநாள் சீனாவுக்கு 85 வீதம் இலங்கைக்கு 15 வீதம் என்று உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி, துறைமுகத்தை விற்பனை செய்யும் முன்னர், தனக்கு ஆதரவான, களுத்துறையில் தேர்தலில் தோற்றுப் போன மகிந்த சமரசிங்கவை துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சராக நியமித்தார். இதனையடுத்தே துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடியே துறைமுகத்தை விற்பனை செய்தனர் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.