கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் - பசில் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடலாம் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தின் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசி பசில் ராஜபக்ச, “ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், மாகாண சபைத் தேர்தல் பற்றி பேசப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது அவசியம் என தேர்தல் ஆணையாளர் கூறினார். ஜனாதிபதித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் என நினைக்கின்றேன். பெருத்தமான நேரத்தில் தகுதியான வேட்பாளர் வருவார். பொது வேட்பாளராக சில நேரம் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடலாம் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பசில் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கோத்தபாய ராஜபக்சவின் உடல் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருந்த போதிலும் இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.