ஜனாதிபதி நாட்டை மோசமான நிலைமைக்கு கொண்டு செல்கிறார்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிந்தே நாட்டை மோசமான நிலைமைக்கு கொண்டு செல்வதாகவும் அது தொடர்பாக சமூகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்படாதது சிக்கலுக்குரியது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என்ற போதிலும் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும் உரிமை இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிவில் அமைப்புகள் உட்பட அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் தலையிடாது போனால், நாடு என்ற வகையில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அரசியல் அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் அதற்கு எதிராக நீதிமன்றத்தில வழக்கு தொடரவும் முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பது சட்டவிரோதமான செயல் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சார்பில் அமைச்சரவையே நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் அதனடிப்படையில் செயற்படவும் கடமைப்பட்டுள்ளார். தொடர்ந்தும் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமல் இருந்தால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியாது போகும் என்பதால், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.