சுதந்திரக் கட்சி - மொட்டுக் கட்சி ஆகியவற்றின் கோரிக்கைக்கு அமைய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது! ஹக்கீம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட போதிலும் இறுதி அந்த இரண்டு கட்சிகளும் குழுவை பகிஷ்கரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த தெரிவுக்குழு மிகவும் நம்பிக்கையான அடிப்படையில் எந்த முடிவை வழங்கினாலும் அது விமர்சிக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ராமஞ்ஞைய பௌத்த பீடத்தின் மாநாயக்கர் நாபான பேமசிறி தேரரை நேற்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை தவிர ஏனைய கட்சிகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை பகிஷ்கரித்துள்ளன. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில், நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்க தீர்மானிக்கப்பட்டதால், அதனை மாற்ற முடியாது.

அண்மையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு கூடியதுடன் நிறைவேற்ற அதிகாரத்திற்கு அடிப்பணியாமல் செய்யப்பட்டது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசியலமைப்பு சபையின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் எதிர்வரும் நாட்களின் இது சம்பந்தமாக பேசி இணக்கத்திற்கு வருவார்கள் என நம்புகிறேன்.

கடந்த காலங்களிலும் நிறைவேற்று அதிகாரத்திற்கு நாடாளுமன்றத்திற்கு இடையில் இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டன.எனினும் இறுதியில் அரசியலமைப்பு ரீதியான செயற்பாடு முன்னெடுக்கப்படும் என நம்புகிறோம்.

மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்குமாறு மாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கையை மதிக்கின்றோம். கூட்டாக எடுத்த தீர்மானத்தை திடீரென மாற்றினால், விமர்சனங்களுக்கு உள்ளாகலாம். இதனால், கலந்துரையாடி தீர்மானம் ஒன்று வர வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.