சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஜப்பான் உதவும்: ஜப்பான் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கை முழுமையான உதவியை வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக ஜப்பான் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் டெசிகோ அபே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில், பாதுகாப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவது சம்பந்தமாக இரண்டு நாடுகளும் கவனம் செலுத்தி இருப்பது, சர்வதேச மட்டத்திலான பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டுக்கு நுழையாமல் தடுக்க முக்கியமான நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் வெளிவிவகார ராஜாங்க அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையிலான இருத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் வழங்கி வரும் உதவிகளுக்கு இலங்கை தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் இதன் போது கூறியுள்ளார்.

இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை இணைந்து செயற்படுத்த எண்ணியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு திட்டம் சம்பந்தமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விபரங்களை பிரதமர், தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை வீதி அபிவிருத்திகள் உட்பட சில துறைகளில் இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டுத்திட்டத்தை செயற்படுத்துவது சம்பந்தமாகவும் இதன் போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.

அலரி மாளிகையில் இன்று நடந்த இந்த பேச்சுவார்த்தையில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிர சுகியாமா, தூதரக அதிகாரி, டகேசி ஓசாசி, ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளான டகிஹிரோ ஷியோடா, டெட்சுவோ கிடாடா ஆகியோர் கலந்துகொண்டனர்.