ஆயுதத்துடன் மோதலுக்கு தயாராகும் சபாநாயகர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி, பிரதமர் மட்டுமல்ல தற்போது சபாநாயகரும் ஆயுதத்துடன் மோதலுக்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் என மூன்று தரப்பினரும் ஒருவரை ஒருவர் குறைகூறுகின்றனரே தவிர நாட்டின் நிர்வாக அதிகாரத்தை பார்ப்பதில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு பதிலாக ஜனாதிபதி முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகிய அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களாக பிரதியமைச்சர்களை நியமித்துள்ளார். இது நெருக்கடியின் உச்சம்.

நாட்டின் அதிகாரம் நிர்வாகிகளிடம் இல்லை. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வஹாபிச அடிப்படைவாதம் பற்றி விசாரணை நடக்கின்றதா என்பது எமக்கு தெரியாது. அரசாங்கம் இது பற்றி கவனம் செலுத்தாத காரணத்தினால், நாம் பாதுகாப்பற்ற நிலைமையில் இருக்கின்றோம். சுதந்திரத்திற்கு முதல் முறையாக நாட்டில் இப்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிலைமையை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் 5 வது ஷரத்திற்கு அமைய ஜனாதிபதி அரசாங்கம், முப்படைகளின் தலைவர். அமைச்சரவை நியமிப்பு சட்டவிரோதமானது என அமைச்சர் கிரியெல்ல கூறுகிறார்.

அமைச்சரவை ஏன் கூடவில்லை என்பதை ஆராய்ந்து அதனை சரி செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரை மக்களுக்கு பிடிக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். இது இவர்களின் புதிய கதை. 225 பேர் என்பது அரசாங்கம் அல்ல. அரசாங்கம் என்பது ஜனாதிபதி, பிரதமர் அமைச்சரவை. அரசாங்கம் தனது திறமையின்மையை மறைக்க அதனை 225 பேர் மீது சுமத்த முயற்சித்து வருகிறது.

நன்றாக வேலை செய்யக் கூடியவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்துள்ளனர். அரசாங்கத்தின் வேலை செய்ய முடியாத தனத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சுமத்தும் வெட்கமற்ற முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். பிரதமருக்கு ஜனாதிபதியுடன் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது. நாட்டின் பிரதான பிரச்சினையில் இருந்து அரசாங்கம் நழுவியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருந்து இல்லை. சுகாதார அமைச்சர் காயமடைந்தவர்களை பார்க்க செல்லவில்லை. இது அனர்த்தமான நிலைமை. ஈஸ்டர் நாளில் வழிபாடு நடந்த சென்றவர்களே குற்றவாளியாக மாறியுள்ளனர் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.