சஹ்ரான் எப்போது தீவிரவாதியானார்? மனம் திறக்கும் ஹிஸ்புல்லா

Report Print Jeslin Jeslin in அரசியல்

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார். அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதியானார் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் பதவிகளிலிருந்து விலகினோம், ஆனால் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டோம் என்றே சொல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பதவிகளில் இருந்து விலகும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை.

எனினும் அடுத்த நாள் காலையில் இருந்து இடம்பெற்ற சம்பவங்கள் எங்களை பதவி விலக வைத்தது. இன்றைய நிலைமையில் இதனை செய்யாவிடின் பாரிய விளைவை நாங்கள் எதிர்நோக்க நேரிடும் என முஸ்லிம் தலைவர்களுடன் கலந்துரையாடும்போது நாங்கள் தீர்மானித்தோம்.

ஞானசார தேரரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும் நாங்கள் இராஜினாமா செய்த அன்று கண்டியில் வைத்து எங்களது சமூகத்தை அழிப்பேன் ஒவ்வொரு வீட்டையும் மரண வீடாக்குவேன் என அவர் கூறி செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

மேலும், அன்றையதினம் எங்களது சமூகம் இருக்கின்ற கிராமங்களுக்கு, எங்களது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் எங்களால் எமது சமூகம் அழிந்து விடக்கூடாது, குறிப்பாக என்னால் எனது சமூகத்திற்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக கூட்டாக சேர்ந்து முடிவெடுத்து எங்களது பதவிகளைத் துறந்தோம்.

நாங்கள் இராஜினாமா செய்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நிலைமைகளை தெளிவுப்படுத்தினேன். எனினும் நான் உங்களை பதவியில் இருந்த விலக்க மாட்டேன் நீங்கள் வேண்டுமானால் இராஜினாமா செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

மேலும், நாளைய தினம் நீங்கள் இராஜினாமா செய்யாவிட்டாலும் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை. உண்மையில் அந்த இக்கட்டான சூழலில் எங்களை பதவி விலக விடாமல் எவ்வாறு சூழ்நிலையை சமாளிக்கலாம். கலவரங்களை கட்டுப்படுத்தலாம் என சிந்தித்து அதனை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார்.

ஆளுநராக பதவி வகிக்கும்போது என்னால் பேச முடியாமல் போய்விட்டது. எனக்கு எதிராக நிறைய முறைப்பாடுகள் வந்தன. இவ்வாறான முறைப்பாடுகள் வரும்போது நான் ஒரு ஆளுநர் என்ற அடிப்படையில் பதில் அளிக்க முடியாத சூழல் எனக்கு இருந்தது. இப்போது பதவி இல்லை. மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன்.

இஸ்லாத்தில் வஹாபிசம் என்பது அடிப்படைவாதம் அல்ல. அது ஒரு பிழையான கருத்து. இஸ்லாத்தில் அடிப்படைவாதமும் கிடையாது.

அதேபோல தௌஹீத் என்பது ஒரு மார்க்கம். கட்டாயம் தௌஹீத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். அல்லாஹ் ஒருவன் மாத்திரமே என்பதுதான் தௌஹீத். அது ஒரு கொள்கை. குண்டு வைப்பது தௌஹீத் அல்ல. யாராவது ஒருவர் தௌஹீத்தை மறுத்தால் அவர் முஸ்லிம் அல்ல.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினை சஹ்ரான்தான் உருவாக்கினார். எனினும் தற்போது அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டிற்கு பிறகு சஹ்ரான் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

எனக்கு தெரிந்தவரையில் 2017ஆம் ஆண்டின் பின்னர் அந்த அமைப்பில் சஹ்ரான் இல்லை. வெளியில் சென்று அவர் சிலரை சேர்த்துக்கொண்டு தனியான குழுவொன்றை அமைத்து அதன் ஊடாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

சஹ்ரான் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை செய்து கொண்டுதான் இருந்தார். உண்மையில் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 2017ஆம் ஆண்டு வரையில் மார்க்கத்தில் கடுமையான தீவிரமாக சஹ்ரான் செயற்பட்டார்.

எதாவது குழபத்தை சஹ்ரான் உண்டுபன்னிக்கொண்டே இருந்தார். மாதத்திற்கு ஒன்றை சொல்லுவார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார்.

அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதியானார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என அப்பாவி பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறையில் பல கொடுமைகள் நடத்தப்படுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் ஒரு லட்சம் தா, ஐம்பதாயிரம் ரூபா தா என பணம் கேட்டு தொல்லை செய்கின்றனர். இல்லாவிட்டால் அடிப்போம் என கூறுகின்றனர். எனக்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.