மைத்திரியை சிக்க வைப்பதற்கான பொறி! நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கம்?

Report Print Rakesh in அரசியல்

"உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்கான முழுப் பொறுப்பையும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்துவதே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கமாக இருக்கின்றது என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எமக்குத் துளியளவும் நம்பிக்கை இல்லை.

தாக்குதல்களுக்கான முழுப் பொறுப்பையும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்துவதே இந்தக் குழுவின் நோக்கமாக இருக்கின்றது. இதனால் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்.

குற்றவாளிகளைக் காப்பற்றுவதற்காகவே ரணில் அரசின் அழுத்தத்தின் பிரகாரம் இந்தத் தெரிவுக்குழுவை சபாநாயகர் நியமித்திருந்தார். இப்படியான தெரிவுக்குழுவை நாம் எப்படி நம்புவது? அதனால்தான் இந்தக் குழுவில் பொது எதிரணி உறுப்பினர்கள் இணையவில்லை.

தாக்குதல்கள் தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக விசேட விசாரணைக்குழுவை ஜனாதிபதி நியமித்திருந்தார். அந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனவே, விசேட விசாரணைக் குழுவின் அறிக்கையை ஜனாதிபதி உடன் பகிரங்கப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.