அரச கட்டமைப்பை சீர்குலைக்க அரச தலைவருக்கு இடமளிக்க முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

அரச கட்டமைப்பை சீர்குலைக்க அரச தலைவருக்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மீண்டும் நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் அரசியலமைப்புடன் அரசியல் மற்றும் சட்ட ரீதியான மோதலுக்கு தயாராகி வருகிறார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் தேசிய பாதுகாப்பு பாதிப்பு ஏற்படும் வகையிலான தகவல்கள் வெளியாகின்றது என்று ஜனாதிபதி இதற்கு காரணமாக கூறுகிறார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்துமாறு கூறி, ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டாமல் நிறுத்தியுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.

நிறைவேற்று அதிகாரம், ஜனாதிபதிக்கான அதிகாரம், நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் என்ன என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் தனித்தனியாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் சில சந்தேகத்திற்குரிய இடங்கள் தொடர்பில் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு பின் நாட்டில் நடந்த ஜனநாயக புரட்சியின் போது உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலம் தெளிவாகியது.

குறிப்பாக 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியின் அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக தீர்ப்பளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரங்கள் பற்றியும் தீர்ப்பு வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தனது விருப்பத்திற்கு அமைய கலைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவில்லாத நபரை பிரதமராக நியமிக்க முடியாது.

எமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியே அரசாங்கம், அமைச்சரவை ஆகியவற்றின் பிரதானி. நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்டவர். இதனால், எந்த நிலைமையாக இருந்தாலும் அரச கட்டமைப்பை நடத்திச் செல்வது ஜனாதிபதியின் கடமை எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers