மக்களின் மனநிலையோடு விளையாடும் திட்டங்கள்: கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்குமா?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசின் புதிய சில சட்டதிட்டங்களால் சாதாரண வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுகளாக அவை அமைந்துவிடுகின்றன.

அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் கண்ணாடி போன்ற பையினைக் கொண்டுவர வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இது சில பாடசாலைகளில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றாலும், பல பாடசாலைகள் இதனை கட்டாயமான ஒன்றாக்கி செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் யாழ். பாடசாலை ஒன்றும் இக்கட்டளையை கடுமையாகப் பின்பற்றி ஒரு குடும்பத்தினை மனவுளச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

யாழ்ப்பாணம் சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாது வழமையாக பயன்படுத்தும் சாதாரண பையை கொண்டு சென்றுள்ளதால் மாணவனை தண்டித்துள்ளதாக தெரியவந்திருக்கிறது.

குறித்த மாணவனிடம், எத்தனை தடவை சொல்வது கண்ணாடி பாக் கொண்டு வர தெரியாதா என பாடசாலை சமூகம் வினவியுள்ளதுடன், மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை கழற்றி வீசியுள்ளனர் என பெற்றோரால் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

மாணவனின் தந்தை நடக்க முடியாதவர் என்பதினால், இச்சம்பவம் குறித்து தந்தை சாரணர் இயக்கத்திற்குப் பொறுப்பானவருடன் கதைத்துள்ளார். மாணவனின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பாடசாலை நிர்வாகம் மாணவனின் தந்தையிடம் அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மாணவனின் தாயார் பாடசாலைக்குச் சென்று அதிபருடன் இது குறித்து கதைத்துள்ளார். இதன்போது தாயார், கண்ணாடி பை கொண்டு வர வேண்டும் என்றால் மாணவனின் விலகல் பத்திரத்தை தருமாறு வேதனையின் நிமித்தம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் அதிபர் ஆசிரியர் ஒருவரின் மூலம் மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை வழங்கியுள்ளார் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை நிர்வாகத்தினால் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்தை விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது.

பாடசாலை அதிபரினதும், பள்ளிச் சமூகத்தினதும் இச்செயற்பாட்டினை கல்வியமைச்சு விசாரிக்கும் என்று குறிப்பிட்டாலும், வறுமைக்கோட்டின் கீழ் வாடும் ஒரு குடும்பத்தின் மனநிலையோடு விளையாடும் செயற்பாடாக இது அமைந்திருக்கிறது.

இலங்கையில் இலவசக் கல்வி, இலவசச் சீருடை, இலவசப் புத்தகங்களை வழங்கும் அரசாங்கம். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலால் புதிய இத்திட்டத்தினை கொண்டுவந்த போது, வறுமையில் இருக்கும் குடும்பங்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு, இலவச கண்ணாடிப் பைகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க முடியும்.

ஏனெனில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வறுமையின் பிடியில் வாடும் ஏழைப் பிள்ளைகள் ஆயிரக் கணக்கில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரினாலும் உடனடியாக அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு இசைந்து கொடுத்து செயற்பட முடியாத சூழல் காணப்படுகிறது.

ஏற்கனவே நாட்டில் பொருட்களின் விலைவாசிகளால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் இது போன்ற திட்டங்கள் நிச்சையம் மக்களின் மனங்களில் பெரும் வலியாக அமைந்துவிடும். இது தொடர்பில் கல்வியமைச்சு உரியமுறையிலான கவனத்தினை செலுத்த வேண்டும் என பொதுமக்களும் கல்வியாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.