அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் அடிப்படைவாதிகளே? சிங்கள மக்கள் எண்ணுவதாக மகிந்தானந்த தெரிவிப்பு

Report Print Sinan in அரசியல்

நாங்கள் சாட்சிகளுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேரும் பதவிவிலகினர். அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் அடிப்படைவாதிகளே என்ற கருத்துருவாக்கம் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தும் நோக்கிலான செயற்பாடுகளை, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முன்னெடுப்பதை தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.

அசாத் சாலியின் கருத்தின்படி காத்தான்குடியில் 120 வீடுகள் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதெனின், அந்த சந்தர்ப்பத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சு யாரிடம் காணப்பட்டது? சாகல ரத்நாயக்கவும், ரணில் விக்ரமசிங்கவும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

அதனைவிடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்துகின்றனர்.

இது நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான விடயமாகும். தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து இதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயவல்வதை அவதானிக்க முடிகின்றது.

நாங்கள் சாட்சிகளுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேரும் பதவிவிலகினர். அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் அடிப்படைவாதிகளே என்ற கருத்துருவாக்கம் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனைய அமைச்சர்கள் மீது நாம் குற்றச்சாட்டுக்களை சுமத்தவில்லை. எனினும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம் என்பதை வெளிக்காட்ட முஸ்லிம் அமைச்சர்கள் முயன்றனர். இதன் மூலம் தமது வாக்குகளை தக்கவைத்துக்கொள்வதற்கு அவர்கள் எதிர்பார்த்தனர்.

சிங்கள மக்கள் மத்தியிலும் நாம் நல்லவர்கள் எனக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர். இது மிகத்தெளிவான நாடகம். இது பிரதமரின் ஆலோசனைக்கு அமைய முஸ்லிம் அமைச்சர்கள் தீர்மானித்த நாடகமாகும். இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டாமென நாம் கேட்கின்றோம்.

அவ்வாறு செயற்படுவதால் நாடாளுமன்றத்திற்குள் சிங்கள பௌத்த கூட்டணி ஒன்று உருவாகும். அந்த நிலைமைக்கு எம்மைத் தள்ளிவிடாதீர்கள்.

நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு நாடாளுமன்றத் தேர்தலே தீர்வு எனக் குறிப்பிடுகின்றார்கள் எனினும் அதுத் தீர்வல்ல, மாகாண சபைத் தேர்தலும் இதற்குத் தீர்வல்ல, நாட்டிற்கு பலமிக்க ஜனாதிபதி ஒருவர் அவசியம், அதற்கு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வேண்டும்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள தலைவர் ஒருவர் அவசியம். மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளாமல் இருக்க ஜனாதிபதித் தேர்தலே அவசியம்.

பெரும்பான்மையில்லாத அரசாங்கம் ஒன்றை அமைத்து எவ்வித பிரயோசனமும் இல்லை. ஒக்டோபர் மாதமளவில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும். நவம்பர் மாதம் 23இற்கும் 30இற்கும் இடையில் தேர்தல் இடம்பெற வேண்டும்.

எனினும் இந்த மூன்று நான்கு மாதங்களில் நாடு ஸ்திரமற்ற நிலையில்தான் காணப்படும் அதனை தடுக்க முடியாது எனினும். நாட்டை பாதுகாக்க ஜனாதிபதித் தேர்தல் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.