பல உண்மைகள் வெளிவரும்! விரைவில் அமைச்சரவைக் கூட்டம் - ரணில் உறுதி

Report Print Rakesh in அரசியல்

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தை பயன்படுத்தி அடக்கவும் முடியாது, கலைக்கவும் முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பயணமாவதற்கு முன்னர் நேற்று அவர் அலரி மாளிகையில் வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத்தின் ஏகோபித்த தீர்மானத்துக்கமையவே தெரிவுக்குழுவை சபாநாயகர் நியமித்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம். இதில் நாடாளுமன்றத்தை தவிர வேறு எவரும் தலையிட முடியாது.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 260 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அந்த கொடூர தாக்குதலின் பின்னணியையும் அதனுடன் தொடர்பட்டவர்களையும் நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். எவர் குற்றமிழைத்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

எனவே, தெரிவுக்குழு அழைக்கின்ற அனைவரும் பதவி வேறுபாடின்றி அதன் முன்னிலையில் சாட்சியமளித்தே ஆக வேண்டும். இது தொடர்பில் ஊடகங்கள் உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.

சாட்சியமளிக்க வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி எவரும் கட்டுப்பாடுகளை போட முடியாது.

அதேபோல், இந்தத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தை பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியாது. இதை கலைக்கவும் முடியாது. பொது எதிரணியினர் ஆட்சியை பிடிப்பதற்காகவும், குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவும் தெரிவுக்குழுவை கண்டபடி விமர்சிக்கின்றனர்.

இது தொடர்பில் நாம் அலட்டிக் கொள்ள கூடாது. தெரிவுக்குழு விசாரணையின் நிறைவில் பல உண்மைகள் வெளிவரும். அப்போதுதான் தெரிவுக்குழுவின் நம்பகத்தன்மையை அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்.

தெரிவுக்குழுவை கலைக்கவில்லை என்பதற்காக அமைச்சரவையும் இயங்காது என எவரும் நினைக்கக்கூடாது. அமைச்சரவை தொடர்ந்து இயங்குகின்றது. ஏதோவொரு வழியில் விரைவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers