இந்தியா விரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Report Print Rakesh in அரசியல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கிணங்க விரைவில் புதுடெல்லி சென்று அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாக பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை வென்றெடுப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இலங்கையில் இனப்பிரச்சினை இனியும் தொடர இந்தியா விரும்பாது; ஒருபோதும் அனுமதிக்காது.

இங்கு தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ வேண்டும் எனவும், பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் எமக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் நாம் எடுத்துரைத்தோம்.

அவரின் அழைப்புக்கிணங்க விரைவில் புதுடெல்லி செல்லவுள்ளோம். அங்கு அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாகப் பேசுவோம்.

அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசுக்கு இந்திய மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை நாம் வென்றெடுப்போம்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவிஸ், ஆஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும். இந்த நம்பிக்கை எமக்குண்டு.

இனியும் இலங்கை அரசு இந்திய உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே முடியாது. இந்தியாவும் ஏனைய நாடுகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதன்பிரகாரம்தான் சர்வதேச தலைவர்கள் இலங்கை வரும்போது எம்மைத் தனியாக சந்தித்துப் பேச்சு நடத்துகின்றனர்.

நீண்டகாலமாகத் தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இதனை உலக நாடுகளிடம் நாம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளோம்.

எனவே, இதற்காகத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். எமக்குள் வேற்றுமைகள் இருக்கக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

அதேவேளை, இலங்கை அரசும் தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயற்பட வேண்டும். முப்பது வருட கால ஆயுதப் போராட்டத்தால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

பல்லாயிரக்கணக்கான உறவுகளை இழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்; நூற்றுக்கணக்கானோர் அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டனர்; பெரும் சொத்துக்களை இழந்தனர். அப்படி ஒரு நிலைமை இங்கு மீண்டும் ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.