மைத்திரி ஏன் தஜிகிஸ்தான் சென்றார்? ஊடகப் பிரிவு விளக்கம்

Report Print Rakesh in அரசியல்

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் பயணமாகியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5ஆவது மாநாட்டில் (CICA) பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) முற்பகல் தஜிகிஸ்தான் பயணமானார்.

CICA ஆனது 1992ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட பல்-தேசிய மாநாடாகும். இலங்கை CICAயின் அவதானிப்பு நாடொன்றாக 2012ஆம் ஆண்டிலிருந்து செயற்படுகின்றது.

இலங்கையானது, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் ஒரு உறுப்பு நாடாக அதன் 26 உறுப்பு நாடுகளால், 2018 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

CICA உறுப்புரிமையானது உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் CICA யின் ஏனைய உறுப்பு நாடுகளிலுள்ள மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை மேம்படுத்த உதவியாகவுள்ளது.

CICA யின் உறுப்பு நாடுகளில் ஆப்கானிஸ்தான், அஸர்பைஜான், பஹ்ரைன், வங்காளதேசம், கம்போடியா, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மொங்கோலியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், கட்டார், கொரிய குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், உஸ்பகிஸ்தான், மற்றும் வியட்நாம் ஆகியன உள்ளடங்குகின்றன.

இதன் 5ஆவது மாநாடு ஜூன் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெறுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜூன் 15ஆம் திகதி இடம்பெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி ரஹ்மான் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் - என்றுள்ளது.

Latest Offers