இராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய சிறீதரன் எம்.பி

Report Print Yathu in அரசியல்

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியில் இருந்து இன்று வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பேரில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவத்தினரும், சிவில் பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் அசாதாரண சூழ்நிலைகள் மாறி இயல்பு நிலை மீளத்திரும்பியுள்ள போதும் இன்று வரை பாடசாலைகள் முழுநேர இராணுவப் பாதுகாப்பிலிருந்தும், கண்காணிப்பிலிருந்தும் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மாணவ தலைவர்களை விடுத்து இராணுவத்தினரும், சிவில் பாதுகாப்புபடையினருமே மாணவர்களையும், அவர்களது புத்தகப்பைகளையும் சோதனைக்குட்படுத்துவதை இன்றைய தினம் கூட கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் என்னால் நேரடியாக அவதானிக்க முடிந்தது.

அதேவேளை கடமை நிமித்தமோ, அவசிய தேவைப்பாடுகள் குறித்த கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் கூட பாடசாலைகளுக்குள் உள்நுழைய முடியாத நிலை காணப்படுவதோடு, இன்றைய தினம் மேற்படி பாடசாலைக்கு நான் நேரடியாகச் சென்றிருந்த போது என்னாலும் இயல்பாக அப் பாடசாலைக்குள் செல்ல முடியாத நிலையே இருந்தது.

குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையிலும், கொழும்பிலுள்ள பிரபல தேசிய பாடசாலைகளில் கூட இராணுவப் பிரசன்னம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழர்கள் வாழும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குள் வைத்திருப்பது மக்கள் மத்தியில் விசனத்தையும், அச்ச உணர்வையும் தோற்றுவிக்கும் செயற்பாடாகவே உள்ளது.

எனவே தயவுசெய்து தாங்கள் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் எமது பிரதேச பாடசாலைகளை இராணுவ மயப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கும், பாடசாலைச் சூழலை இயல்பு நிலைக்குகொண்டு வருவதற்கும், ஆசிரியர்கள், மாணவர்கள் மன அழுத்தங்களும், கெடுபிடிகளும் அற்ற இயல்பான சூழலில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஆவணம் செய்யுமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers