புலிகளுடன் தொடர்பு வைத்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறு! ஆனால் சஹ்ரானுடன் தொடர்புடைய ஹிஸ்புல்லா?

Report Print Theesan in அரசியல்

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறு இந்த மண்ணிலே இருக்கின்ற நிலையில், சஹ்ரானுடன் தொடர்புடைய ஹிஸ்புல்லாவை கதிரையிலே அமர வைத்து கேள்விகளை தொடுக்கின்றது அரசாங்கம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா - தோணிக்கல் ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்கு கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அலுவலகம் மற்றும் கடினப்பந்து பயிற்சிக் கூடம் என்பன நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இன்று அரசியலை நாங்கள் உற்று நோக்கும்போது இந்த நாட்டிலே இருக்கின்ற இப்போதைய அரசாங்கம் மட்டும் அல்ல, கடந்த காலங்களில் இருந்த அரசாங்கம் கூட தங்களுடைய இரட்டை முகங்களை எங்களுக்கு காட்டி கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்கள் தேவாலயங்களில் நடைபெற்றிருந்தன. அதற்கான காரணம் யார் என்பது கூட கண்டறியப்பட்ட பிறகும் அவர்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை கூப்பிட்டு கதிரையிலே அமரவைத்து அவர்களிடம் விசாரணை செய்கின்ற அரசாங்கத்தின் புதுமுகங்களை இப்போது பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் எங்களைப் பொறுத்த வரையில் எங்களுடைய உரிமை தொடர்பாக போராடிய போதும் இந்த நாட்டைப் பொறுத்தவரையில் அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களோடு தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்த எங்களுடைய தேச தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் தான் இந்த மண்ணிலே இருக்கின்றது.

ஆனால் இப்பொழுது நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலோடு நேரடியாக தொடர்பில் இருந்த சஹ்ரான் என்கின்ற இஸ்லாமிய பயங்கரவாதியோடு கிழக்கு மாகாணத்தினுடைய முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா இருக்கின்ற புகைப்படங்கள், அவர்களோடு உரையாடுகின்ற ஒளிநாடாக்கள் இருக்கின்ற போதும் அவரை இந்த நாட்டினுடைய அரசாங்கம் கதிரையிலே அமரவைத்து கேள்விகளை தொடுக்கின்றது.

ஆனால் எங்களுடைய இளைஞர்கள் எத்தனையோ பேர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் இன்றும் சிறைகளிலே வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குரிய எதிர்காலம் இந்த சிறைகளிலே முடியப்போகின்றது.

அவர்களுக்குரிய அத்தியாயங்கள் இனி முடியப் போகின்றது. அவர்களுக்கான வாழ்வு, வாழ்வியலுக்கான சந்தர்ப்பங்கள் இந்த நாட்டிலே நிச்சயமாக கிடைக்கப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.