பௌத்த பிக்குகளின் கைகளில் பிரச்சினை ஒப்படைக்கப்பட்டுள்ளமை ஆபத்தான விடயம்: செல்வம் எம்.பி ஆதங்கம்

Report Print Thileepan Thileepan in அரசியல்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் பௌத்த பிக்குகளின் கைகளில் பிரச்சினையை ஒப்படைத்துள்ளமையானது ஆபத்தான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தனது அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் அமைச்சர்களுடைய பதவி விலகலை வரவேற்கத்தக்க விடயமாக நான் பார்க்கவில்லை. ஏற்கனவே அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதும், ஆளுநர் ஹிஸ்புல்லா மீதும் அழுத்தங்கள் நாடு பூராகவும் இருந்தது.

அப்போது அவர்கள் இருவரும் அல்லது ஒட்டுமொத்தமாக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியிருந்தால், அவர்கள் தங்களது நியாயப்பாட்டை வெளிப்படுத்தும் தன்மையோடு பதவி விலகியுள்ளார்கள் என்பதை ஏற்று கொண்டிருக்கலாம்.

ஆனால் இப்போது அவர்கள் இரண்டு தவறுகளை செய்துள்ளார்கள். ஒன்று பௌத்த பிக்குகளின் கைகளில் இந்த பிரச்சினையை கொடுத்துள்ளார்கள்.

சாதாரண சூழலில் விலகாது பௌத்த பிக்குகள் உண்ணாவிரதம் இருந்த பின்பு தங்களால் நாட்டில் பாரிய பிரச்சினை வரும் என்ற அச்சம் காரணமாக தான் அவர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளார்களே தவிர, நாட்டில் நன்மை ஏற்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர்கள் செய்யவில்லை என்பது என்னுடைய குற்றச்சாட்டு.

ஏற்கனவே பௌத்த மதத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் குறையாக சொல்லி வந்திருக்கின்றோம்.

தற்போது பௌத்த பிக்குகள் தங்களுடைய மதம் சார்ந்த செயற்பாடுகளை மறந்து எல்லா விடயத்திலும் தலையிட்டு அரசியல் ரீதியாக பெரும்பான்மை இனத்திற்கு வலு சேர்க்கின்ற வகையில் செயற்படுகிறார்கள்.

இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய பிரச்சினைகளில் அவர்களுடைய ஆதிக்கம் கூடுதலாக இருப்பதற்கான ஒரு சக்தியாக இது மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே முஸ்லிம் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் புத்த பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு பதவி விலகியுள்ளமை தேசிய இனமாகிய எங்களுக்கு பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணியுள்ளது.

எமது தீர்வு விடயத்திலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையை பிக்குகளின் போராட்டத்தின் பின்னரான ஒட்டுமொத்த பதவி விலகல் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்னும் பிரச்சினைகளும், குழப்பங்களும் வரும்.

அத்துடன் முஸ்லிம் தலைவர்கள் ஒற்றுமையாக செயற்படுவதாக கூறப்படுகிறது. தமிழர் தரப்பில் ஒற்றுமை இல்லை என பேசப்படுகிறது. ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார்.

Latest Offers