யாழ். தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Report Print Sumi in அரசியல்

யாழ். தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

தென்மராட்சி பிரதேச கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், நீர் வழங்கல் தொடர்பான துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு, சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கூட்டத்தில் ஒருவர் குழப்பம் விளைவிக்க முயற்சித்த போதும் கூட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக வருகை தந்த ஒருவர், குறித்த கூட்டத்தை கூட்ட அனுமதி இல்லை எனவும், ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத்தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இணைத்தலைவர்கள் இல்லாமல் கூட்டத்தை கூட்ட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளிக்கும் போது,

அரசாங்கத்தில் அதிகாரம் உள்ள ஒரு அமைச்சரின் அனுமதியுடன் கூட்டத்தை கூட்ட அனுமதி உண்டு எனவும், இக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடத்தப்படுவதால் இது சட்ட பூர்வமான விடயம் எனவும் வாதிட்ட நிலையில், கூட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் தென்மராட்சி பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பாக இதன்போது பேசப்பட்டதுடன், மண் கடத்தலை பொலிஸார் தடுக்காமல் இருப்பதற்கான காரணங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.

மேலும் தென்மராட்சி கல்வி நிலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கமைய தென்மராட்சி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளில் மலசலகூட வசதி இல்லை என தென்மராட்சி பிரதி கல்வி பணிப்பாளர் தெரிவித்திருந்த நிலையில், அதனை பெற்று கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், தனங்களப்பு பகுதியில் இலங்கை மின்சார சபையினால் நிர்மாணிக்கப்படும் காற்றாலைக்கான அனுமதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், சாவகச்சேரி பிரதேச மற்றும் நகரசபை தவிசாளர்கள், உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.