விசாரணைக்கு மைத்திரி, ரணிலை அழைக்கும் திட்டம்? தெரிவுக்குழுவின் தலைவர் பதில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தெரிவுக்குழு முன் விசாரணைக்கு அழைப்பது தொடர்பில் இதுவரை எந்தத் திட்டமும் இல்லை என பிரதி சபாநாயகரும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளை நடத்திவருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய குமாரசிறி, ஜனாதிபதியையும், பிரதமரையும் தேவை ஏற்பட்டால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்களா என்று இன்று ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கியுள்ள அவர்,

ஜனாதிபதியையும், பிரதமரையும் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு அழைக்கும் ஆயத்தம் எவையும் தற்போதுவரை இடம்பெறவில்லை. ஆனால் விசாரணைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கு அவர்கள் இருவரும் அழைக்கப்பட வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் கோரும்பட்சத்தில், நான் அதுகுறித்து ஆராய்ந்து தீர்மானமொன்றை மேற்கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்காக பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட, முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி சிசிர மென்டிஸ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி ஆஜராகி சாட்சியம் வழங்கியிருந்தனர்.

இந்த விசாரணை ஆணைக்குழுவில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், பல்வேறு தகவல்களை முன்வைத்தார். 2015ஆம் ஆண்டு தேர்தலின் போது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்தார் என்று குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாஹ்வின் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers