மைத்திரி இருக்கும் இடத்துக்கே செல்லவுள்ள தெரிவுக்குழு?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் அறிந்து கொள்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்திருப்பதாக அக்குழுவினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு தனது விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

இத் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்காக பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட, முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி சிசிர மென்டிஸ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி ஆஜராகி சாட்சியம் வழங்கியிருந்தனர்.

இந்த விசாரணை ஆணைக்குழுவில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், பல்வேறு தகவல்களை முன்வைத்தார். 2015ஆம் ஆண்டு தேர்தலின் போது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்தார் என்று குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாஹ்வின் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துகளையும் கேட்டறியத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கிய சிலர், ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டுக் கூறியதாலும், தெரிவுக்குழுவின் உறுப்பினர்களைச் சந்திக்க ஜனாதிபதியும் விருப்பம் தெரிவித்துள்ள சூழ்நிலையிலும், ஜனாதிபதியின் கருத்துகளைக் கேட்டறிய, தெரிவுக்குழு உத்தேசித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஜனாதிபதியை தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு கோராமல், ஜனாதிபதி இருக்கும் இடத்துக்குச் சென்று, அவரது கருத்துகளைப்பெற யோசனை செய்யப்பட்டுள்ளதாக, தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தெரிவுக்குழு முன் விசாரணைக்கு அழைப்பது தொடர்பில் இதுவரை எந்தத் திட்டமும் இல்லை என பிரதி சபாநாயகரும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers