கடும் சர்ச்சைகளுக்குப் பின்னர் மைத்திரி தலைமையில் நாளை கூடுகிறது அமைச்சரவை!

Report Print Rakesh in அரசியல்

கடும் சர்ச்சைகளுக்குப் பின்னர் நாளை செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூடுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.

தஜிகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி, நேற்றுக் காலை நாடு திரும்பியவுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் அமைச்சர்கள் சிலருடன் உரையாடியுள்ளார். இதன்போது, நாளை காலை 9.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தனது தலைமையில் நடைபெறும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விசேட அமைச்சரவைக் கூட்டம் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

"தெரிவுக்குழு முன்னிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் சாட்சியம் வழங்குவதால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகின்றது. எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தும்வரை அமைச்சரவைக் கூட்டத்தை

நடத்தமாட்டேன்" என்று அமைச்சர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இதனால், பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெறவில்லை.

இதற்குப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது. அதாவது, நாடாளுமன்றத்தின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்ட தெரிவுக்குழு விசாரணையை நிறுத்த முடியாது எனவும், பாதுகாப்பு அதிகாரிகள் சாட்சியம் வழங்கும்போது ஊடகங்களுக்கு இனிமேல் அனுமதி இல்லை எனவும் அது தெரிவித்திருந்தது.

இதையடுத்து அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த ஜனாதிபதி இறங்கி வந்துள்ளார் என முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.