அரசுக்கு எதிரான பிரேரணை! கூட்டமைப்பு நாளை ஆராயும் என்கிறார் மாவை

Report Print Rakesh in அரசியல்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம் குறித்தும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நாளை செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளது.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நிலையில், அந்தப் பிரேரணை அடுத்த மாதம் 9ம், 10ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தத்தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆராயவுள்ளது.

நாளை பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடுகின்றது.

இதன்போது இந்த விடயத்தைத் தாம் ஆராயவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கடந்த 9ம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், தமிழர் தரப்பின் சார்பில் அவருடன் சந்திப்பை நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து இந்திய மத்திய அரசு அதிக கரிசனை காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இது குறித்து ஆழமானதும் ஆரோக்கியமானதுமான கலந்துரையாடலை முன்னெடுக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் புதுடில்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆகவே, இது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள் தொடர்பிலும் நாளைய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.