கலிபோர்னிய வழக்கிலிருந்து கோத்தபாயவை பாதுகாக்க முயற்சி?

Report Print Kamel Kamel in அரசியல்

அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றமொன்றில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள இரண்டு வழக்குகளிலிருந்து அவரை மீட்பதற்கு வெளிவிவகார அமைச்சின் ஊடாக முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கின் ஊடகமொன்று இந்த விடயம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றில் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இரண்டு சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு வழக்குகளிலிருந்தும் கோத்தபாய ராஜபக்சவை மீட்பதற்காக, அவருக்கு ராஜதந்திர வரப்பிரசாதங்களை வழங்குவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த சலுகையை கோர திட்டமிட்டுள்ளது.

தற்பொழுது எந்தவிதமான அதிகாரபூர்வமான பதவிகளையும் வகிக்காத கோத்தபாயவிற்கு அரசாங்கம் கருதினால் மட்டும் ராஜதந்திர ரீதியிலான வரப்பிரசாத அடிப்படையில் இரண்டு வழக்குகளிலிருந்தும் விடுதலை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சு இது குறித்து அமெரிக்காவிடம் அறிவித்தால், வழக்கினை தள்ளுபடி செய்வதா இல்லையா என்பதனை நீதிபதி தீர்மானிப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது.

கோத்தபாயவை காப்பாற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியும் என தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.