இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரும் மைத்திரியின் ஆட்சிக்காலம்!

Report Print Kumar in அரசியல்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை பொறுத்தவரையில் கட்சி மாறுவதில் அவர் வரலாறு படைத்தவர் அவர் ஒரு விநோதமான சந்தர்ப்பவாத அரசியல்வாதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுவரும் இராஜகோபுரத்திற்கு கம்பிரலிய திட்டத்தின் ஊடாக 10இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியொதுக்கீட்டில் இராஜகோபுரத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்று நாடாளுமன்ற உறுப்பினரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகின்றது. அதன் பின்னர் அவர் ஜனாதிபதியாக போட்டியிட்டாலும் சரி, வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட்டாலும் அவர் வெல்லமுடியாது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல விடயமாகும். ஏனெனில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கையில், அது தொடர்பில் பகிரங்கமான விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு இதுவொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழு ஒருபக்கம் இருந்தால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் இருக்க வேண்டும். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சகல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அங்கத்துவம் பெறுவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது.

இருந்தாலும் ஆளும்தரப்பின் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த மகிந்த அணியினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாங்களாகவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து விலகிக்கொண்டனர். அது அவர்களின் எதிர்கால அரசியல் இலாபத்தோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூறப்படுகின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது மக்கள் வெளிப்படையாக தெரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றது. ஜனாதிபதி மாறுபட்ட கருத்துகளை கூறுகின்றார்.

அவர் பல்வேறுபட்ட கோணத்தில் தன்னுடைய அரசியல் போக்கை காட்டுகின்றார். ஜனாதிபதி தேர்தலின் பின்பு நான் தோற்றிருந்தால் ஆறடி நில மண்ணின் கீழ் மகிந்த ராஜபக்ச தன்னை அடக்கம் செய்திருப்பார்.

இது அவருடைய ஒரு அரசியல் போக்காகும். இரண்டரை வருடங்களின் பின்பு மகிந்த ராஜபக்சவை அழைத்து பிரதமர் பதவியை கொடுத்திருந்தார். இது அவருடைய இரண்டாவது அரசியல் போக்காகும்.

அவர் ஐக்கியத் தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் மகிந்த ராஜபக்ச ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார் என இன்னுமொரு கருத்தைச் சொன்னார்.

நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும், அதற்குரிய சர்வஜன வாக்குரிமையை நடத்தி மக்களின் சம்மதத்தை பெறப்போகின்றேன் என சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை சொல்லி அடிக்கடி தனது கருத்துகளை மாற்றிக்கொண்டு செல்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.