தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவேண்டும் மைத்திரி! மகிந்த தரப்பு வலியுறுத்து

Report Print Rakesh in அரசியல்

“அதிகாரப் போட்டியால் நாடு நாசமாகின்றதை நாம் விரும்பவில்லை. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவொன்றை உடனடியாக எடுக்கவேண்டும்.”

இவ்வாறு மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

“நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்றது. ஜனாதிபதி - பிரதமர் ஆகியோருக்கிடையிலான அதிகாரப் போட்டியால் எவரின் சொல்லைக் கேட்பது என்ற நிலையில் அமைச்சர்கள் உள்ளனர்.

இந்த அதிகாரப் போட்டியால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை, பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறான நிலைமை பல மாதங்களாகத் தொடர்ந்து நீடிக்கின்றபடியால்தான் உயிர்த்த ஞாயிறன்று தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்களை இலகுவாக மேற்கொண்டிருந்தனர்.

நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு உடன் தீர்வு வேண்டுமெனில் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே ஒரே வழி. அப்போதுதான் எந்தத் தரப்பின் கையில் ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.

என்னதான் அதிகாரப் போட்டி இப்போது நிலவினாலும் நாட்டின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவே. எனவே, நாட்டின் ஸ்திரமற்ற அரசியல் நிலைக்கு அவர்தான் தீர்வுகாண வேண்டும்.

போரால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ச அணியே மீட்டெடுத்தது. சகல இடங்களிலும் அபிவிருத்தியை முன்னெடுத்தது. பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது.

இவையெல்லாம் இன்று அதிகாரப் போட்டியால் வீழ்ச்சியடைந்துள்ளன. நாடு நாசமாகின்றதை நாம் விரும்பவில்லை.

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவொன்றை உடனடியாக எடுக்கவேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest Offers