பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் ஜூன் மாதத்துக்குரிய இரண்டாவது வார சபை அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்து மஹிந்த அணியான பொது எதிரணி கேள்வி எழுப்பும் எனத் தெரியவருகின்றது.

நாடாளுமன்ற அமர்வையொட்டி ஆளுங்கட்சி நாடாளுமன்றக் கூட்டம் இன்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதேவேளை, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரவாக ஆராயப்படவுள்ளன.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.