தொழில் மட்டத்திலான அரசியலை உருவாக்க வேண்டும் - அமைச்சர் சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்

படித்தவர்கள் அடங்கிய தொழில் மட்டத்திலான அரசியலை இலங்கையில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் வர்த்தக துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் 10 பேரை எடுத்துக்கொள்வோம். இவர்கள் பெற்றோர் யார் என்பது எமக்கு தெரியாது. இவர்கள் 10 பேரும் சுய முயற்சியில் முன்னேறியவர்கள்.

நிர்வாக சேவையில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தமது பெற்றோர் மூலம் உயர் பதவிகளுக்கு வரவில்லை. மருத்துவர்கள், உயர் மட்ட பொறியியலாளர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், பாதுகாப்பு பிரிவுகளின் உயர் பதவிகளில் இருப்போர் இவர்கள் அனைவரும் திறமையின் அடிப்படையில் முன்னேறியவர்கள்.

விளையாட்டு, கலைத்துறையிலும் அப்படித்தான். ஆனால், அரசியலில் திறமைக்கு இடமில்லை. எமது பிராந்தியத்தில் சிங்கப்பூர், ஜப்பான், சீனா என அனைத்து நாடுகளிலும் அரசியலில் திறமைக்கே முதலிடம் வழங்கியதால், அவை முன்னேறியுள்ளன.

பண்டைய காலத்தில் டைனோசர் என்ற பலமிக்க விலங்கு இருந்தது. எமது நாட்டில் இவ்வாறான பலமிக்க கவரா என்ற காட்டு மாடு இருந்தது. இந்த விலங்கு காரணமாக கவரகிரிய, கவரவில என்ற ஊர் பெயர்கள் உருவாகின. இந்த கவரா என்ற விலங்கு அருகி போனது.

வெள்ளையர்கள் ஏற்படுத்திய தேயிலை தோட்டங்கள் மற்றும் பொருளாதார முறைமைகள் காரணமாக கவரா என்ற மாடு வாழ்விடம் இன்றி அருகி போனது.

எனினும் சுதந்திரத்திற்கு முன்னர் அரசியலில் முன்னிலையில் இருக்கும் வகுப்பினர் அருகி போகவில்லை. அவர்களே இன்றும் அரசியலில் முன்னிலையில் உள்ளனர். இவர்கள் இலகுவில் அருகி போக மாட்டார்கள்.

இந்த வகுப்பினருக்கு பதிலாக தொழில் மட்டத்தில் சிங்களம்,தமிழ், முஸ்லிம், எந்த இனத்தவராக இருந்தாலும் மதமாக இருந்தாலும் பரவாயில்லை. நாட்டிற்கு திறமை, நிபுணத்துவம் உள்ள புதிய அரசியல் வகுப்பை ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வர நாம் திடசங்கட்பம் பூணவேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.