மைத்திரி, ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்! அநுரகுமார

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தத்தமது பதவிகளை உடனடியாகத் துறக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகியிருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் பதவிகளைத் துறக்காமல் மாறி மாறி தமக்கிடையில் சொற்போரில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இது நாட்டுக்கு அழகல்ல. இருவரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார்கள். நாட்டைச் சீரழித்துவிட்டார்கள். இருவரினதும் பொறுப்பற்ற செயல்களினால்தான் உயிர்த்த ஞாயிறு தினமன்று அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர்.

இவர்கள் இருவரும் பதவியில் இருப்பதற்குத் தகுதியற்றவர்கள். அதேவேளை, அமைச்சர்களும் இவர்கள் மாதிரி பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றார்கள்.

எனவேதான் ஒட்டுமொத்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் கொண்டுவந்துள்ளோம். நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை கொண்டு அனைவரும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.