இலங்கை நிறுவனங்களில் அமெரிக்காவிடம் சம்பளம் பெறும் ஆலோசகர்கள்: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் நாட்டு மக்களுக்காக செயற்படுகிறதா அல்லது வெளிநாட்டவருக்காக செயற்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் ஆலோசகர் ஒருவருக்கு அமெரிக்க அரசாங்கம் சம்பளம் வழங்குவதாகவும் அனைத்து நிறுவனங்களிலும் வெளிநாடுகளின் சம்பளத்தை பெறும் நபர்கள் இருப்பதாகவும் இந்த நபர்களிடம் விசேட ஆலோசனைகள் பெறப்படுவதாகவும் கூறினாலும் இதற்கு எழுத்து மூலமான ஆவணங்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளிடம் சம்பளம் பெறும் நபர்கள் யாருடைய தேவைக்காக அரச நிறுவனங்களில் இருக்கின்றனர் என்பது சந்தேகத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் புதிய அவையை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளங்களை அதிகரிக்கவே நாங்கள் கடன் வாங்கினோம்.துறைமுகம், விமான நிலையம், வீதிகளை நிர்மாணித்தன் மூலம் நாட்டின் வளங்கள் அதிகரித்தன. நாட்டுக்கு பெறுமதி கூடியது. துறைமுக நகரை நாம் செலவிடாமல், அவர்களின் பணத்தில் நிர்மாணிக்கவே முயற்சித்தோம். இதற்காக அவர்களுக்கு 50 ஏக்கர் நிலத்தையும் மீதமுள்ள இடங்களை நாம் பெற்றுக்கொள்ளவும் முயற்சித்தோம்.

எனினும் தற்போதைய அரசாங்கம் 400 ஏக்கர் நிலத்தை 99 வருடங்கள் என 200 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. அனைத்து வளங்களை விற்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. தற்போது கையெழுத்திடப்படும் உடன்படிக்கைகளில் என்ன இருக்கின்றது என்பதும் தெரியாது. வெளிநாட்டு இராணுவம் இலங்கைக்கு வரவழைக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.

பட்டினியால் குழந்தை இறந்து போனதாக இன்று பத்திரிகையில் பார்த்தேன். எமது காலத்தில் இப்படி நடக்கவில்லை. மூன்று வேளை சாப்பிட மக்களிடம் பணம் இல்லை. எனினும் முழு நாடும் வளங்களில் நிறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக பழிவாங்குவதை தவிர வேறு எதனையும் அரசாங்கம் செய்யவில்லை. பழிவாங்க அனைத்து தலைவர்களும் இணைந்திருந்தனர். ஆனால் வேலை செய்யும் போது மோதிக்கொள்கின்றனர்.

என்றும் நடக்கக் கூடாத சம்பவம் அண்மையில் நடந்தது. ஏப்ரல் 4 ஆம் திகதியே அரசாங்கத்திற்கு சகல தகவல்களும் கிடைத்தும் ஏன் செயற்படவில்லை. இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை நியமித்து ஊடக கண்காட்சியாக மாற்றியுள்ளனர்.

அது தற்போது சேறுபூசும் நடவடிக்கையாக மாறியுள்ளது. தகவல் கிடைத்தும் ஏன் செயற்படவில்லை. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதை நாடு அறிந்துக்கொள்ள வேண்டும். தற்போது சகல இனத்தவரும் அச்சத்துடன் வாழ்கின்றனர். பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளே அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இல்லை.

30 ஆண்டுகளாக இருந்த பயங்கரவாதத்தை நாங்கள் இரண்டரை வருடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தோம். இந்த பயங்கரவாதத்தையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து இனங்களும் ஒன்றிணைய வேண்டும். நாட்டுக்கு தற்போது வலுவான தலைமைத்துவம் தேவைப்படுகிறது. வலுவான தலைமைத்துவத்தினாலேயே சகல இனங்களும் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers