அதுரலியே ரத்ன தேரர் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார்! அப்துல்லா மஃறூப்

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாக அதுரலியே ரத்ன தேரர் கருத்துக்களை கூறி தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் சதிகளை முன்னெடுக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் முயற்சி தோல்வியடைந்த காரணத்தினால் இன்று தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கில் முஸ்லிம்களின் நிலங்களை அபகரிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நகர அபிவிருத்தி என்ற பெயரில் எமது நிலங்களை கபளீகரம் செய்து வருகின்றனர்.

இன்று எமது பகுதிகளில் மேச்சல் காணிகள் இல்லாது போயுள்ளது. கால்நடை வளர்ப்புக்கு காணிகள் இல்லை. இவ்வாறான நிலைமை நிலவுகின்ற நேரத்தில் அண்மையில் வடக்குக்கு விஜயம் செய்த அதுரலியே ரத்ன தேரர் வடக்கில் தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டி இனக் கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியிருந்தார்.

குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்கள், தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறியிருந்தார்.

இது ஏனென்றால் இதற்கு முன்னர் சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் இப்போது தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டும் நடவடிக்கையை இவர்கள் கையாள்கின்றனர்.

கிழக்கில் சில பெளத்த பிக்குகள் கூட எமது காணிகளை அபகரிக்க முயற்சிகளை எடுக்கின்றனர். நாம் எமது அமைச்சை இராஜினாமா செய்தது போலியான அரசியல் காரணி என கூறினார்கள்.

ஆனால் நாம் அதற்காக எமது அமைச்சுக்களை துறக்கவில்லை. இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் தேவையை கருத்தில் கொண்டே நாம் அமைச்சுக்களை துறந்தோம்.

இன்று எமது மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவசரகால சட்டத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்ட எவரையும் விட வேண்டாம். ஆனால் அப்பாவி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers