மாகாணசபைத் தேர்தலை இந்த வருடம் நடத்த வாய்ப்பில்லை! ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

தற்போதுள்ள சட்ட நிலைமைகளின் கீழ் இந்த வருடம் செப்டம்பரில் மாகாணசபைத் தேர்தலை நடத்த எந்த வாய்ப்பும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வார இறுதியில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கூறியிருந்தமை தொடர்பாக ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் வினவியுள்ளனர்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போதுள்ள சட்டரீதியான நிலைமையில், மாகாணசபைத் தேர்தலை நடத்த புதிய சட்ட மூலத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து கட்சித் தலைவர்களுடன் எந்த பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். எனினும் அதற்கு சாத்தியமில்லை என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.