ஜனாதிபதி மீண்டும் நிறைவேற்று அதிகாரங்களை கோருவது துரதிஷ்டவசமான நிலைமை

Report Print Steephen Steephen in அரசியல்

சர்வாதிகார அதிகாரங்களை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் நிறைவேற்று அதிகாரங்களை கோரி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவது துரதிஷ்டவசமான நிலைமை என புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

சுயாதீன நிறுவனங்களுக்கு தான் விரும்பிய நபர்களை நியமிக்க முடியாமலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாமலும் இருப்பதாக கூறும் ஜனாதிபதி, முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் செயற்பட்டதை போல் நாடாளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து செயற்பட முடியாத சோகத்தை முன்வைத்து வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் மக்கள் கோரிய சுயாதீன நிர்வாகத்திற்கு பதிலாக சர்வாதிகார நிர்வாகம் உருவாகக் கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே லால் விஜேநாயக்க இதனை கூறியுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலமே மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. நிர்வாகம் சுயாதீன ஆணைக்குழுக்களிடம் வழங்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலமே பொலிஸ் துறையும் சுயாதீனமாக மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், அவர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகளை கூட சட்டத்திற்கு முன் கொண்டு வரும் அளவுக்கு பொலிஸ் சுயாதீனமாக மாறியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியை கைது செய்ய முடிந்தது.

ஒக்டோபர் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் போது நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட முடிந்தது. இந்த போராட்டத்தை மறுபக்கம் திருப்ப நாட்டின் பிரதானியாக ஜனாதிபதி செயற்பட்டு வருவதே துரதிஷ்டவசமான நிலைமை.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி தற்போது கூறுகிறார். தனக்கு 62 லட்சம் மக்கள் வாக்களித்ததாக ஜனாதிபதி கூறுகிறார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வரவே மக்கள் அந்த வாக்குகளை அளித்தனர். தமக்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவை என்று மக்கள் கூறினர். ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்றனர்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரினர். மக்கள் கோரியதையே 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டது.

தனது அதிகாரத்தை எடுத்து பிரதமருக்கு கொடுக்க போகின்றார்கள் என்று ஜனாதிபதி கூறினாலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அமைச்சர்களை பிரதமர் பெயரிட மட்டுமே முடியும். ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்படவில்லை எனவும் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.