சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை அவசரகால விதிமுறைகளுக்கு அமைய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விற்கு சொந்தமான தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இது தொடர்பில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தலைமையிலான குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இன்றைய தினம் அக்குழு ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தினை அவசரகால விதிமுறைகளுக்கு அமைய அரசாங்கத்தின் கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக சவுதி அரேபிய நிறுவனத்தின் மூலம் இலங்கை வங்கியில் வைப்பிடப்பட்ட 3 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை வங்கியின் அதிகாரி செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பட்டிக்கலோ கம்பஸ் தனியார் நிறுவனத்திற்கு 3 வங்கி கணக்குள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு 3 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாகவும், அது மீண்டும் செல்லுமாறு பதியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான ஹிரா அறக்கட்டளைக்கு 314 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தன்னுடைய பல்கலைக்கழகத்தை சுவீகரித்துக் கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லை என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.