19ஆவது திருத்தம் சாபக்கேடா? சம்பந்தன் என்ன கூறுகிறார்

Report Print Jeslin Jeslin in அரசியல்

மன்னர் ஆட்சியில் இருந்த முன்னைய சர்வாதிகார ஆட்சியை இல்லாது ஆக்க மக்களின் ஆணையைப் பெற்று அனைத்து தரப்பினருடைய ஆதரவுடன் 19ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது எவ்வாறு சாபக்கேடாக இருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனநாயக பாரம்பரியங்களுக்கமைய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் எவ்வாறு இல்லாது ஆக்கப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மக்கள் ஆணையைப் பெற்றே 19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலுக்கு சென்ற போதும் மன்னர் ஆட்சியைப் போல் சர்வாதிகாரம் கொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை மாற்றியமைக்கப்படும் என்று கூறியதற்கமையவே மக்கள் ஆணை பெறப்பட்டது.

அது மட்டுமன்றி அனைத்து தரப்பினருடைய ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அது நிறைவேற்றப்பட்ட காலத்தில் நாட்டிலுள்ள அனைவரும் சந்தோசம் அடைந்தார்கள். தற்போது ஏன் அது புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கூறப்படுகின்றது என எனக்கு தெரியவில்லை.

19ஆவது அரசியல் சாசனம் கொண்டு வரப்பட்டபோது அதற்கான போதிய காரணங்கள் இருந்தன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையான சர்வாதிகாரம் கொண்டதாக காணப்பட்ட நிலையில் அதை தடுப்பதற்கு 18ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் முக்கியமான விடயங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட வேண்டிய தேவை இருந்தது.

அதை யாரும் மறுக்க முடியாது. அந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்ற அடிப்படையில் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் மக்கள் வாக்களித்தார்கள்.

19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் செய்யப்பட்ட மாற்றங்களை திருத்துவதாயின் அது கவனமாக செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு மாற்றம் கொண்டுவரப்படுமானால் மீண்டும் ஒரு சர்வாதிகார முறைமைக்கு போக வேண்டி வரும். அதை நாம் விரும்பவில்லை. அவ்விதமான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுமாயின் அதை கவனமாக நோக்கி ஜனாதிபதி முறைமையூடாக மீண்டும் ஒரு சர்வாதிகார நிலைமை நாட்டில் ஏற்படாத வகையில் கூட்டமைப்பு தனது பங்களிப்பை முழுமையாக செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers