ஜனாதிபதி முறைக்கும் நாடாளுமன்றத்திற்கும் சமநிலை! சம்பிக்க

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டில் தற்பொழுது ஜனாதிபதி முறைமைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் சமநிலைத் தன்மையொன்று காணப்படுவதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் புனிதப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களை காண்பதற்கான விஜயத்தின் போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் ஜனநாயகத் தன்மை அதிகரித்து, மனித உரிமைகளுக்காக பாரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியிடம் இருந்த அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டதன் ஊடாக, அது நாட்டில் சிறந்த முறையில் பிரயோகிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் 18 ஆம் 19 ஆம் திருத்தச் சட்டங்களை நீக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் அது தவறானது என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளை நாட்டில் இல்லாமல் செய்யும் வரையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கக் கூடாது என்ற கருத்தில் உறுதியாகவுள்ள பெரும்பான்மை இனம் சார்ந்த கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க, தற்பொழுது ஏற்பட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு தொடர்பில் தனது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ 19 ஆவது திருத்தச் சட்டம்தான் பிரச்சினை எனக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.