தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதை புரிந்து நடக்க வேண்டும்: தமிழர் விடுதலைக் கூட்டணி

Report Print Sumi in அரசியல்

தமிழ் மக்களின் அபிவிருத்தி சம்மந்தமான விடயத்திற்குத் தான் ஆதரவு கொடுக்க கூறினோமே தவிர, கல்முனை வாழ் இந்துக்களின் மனதை நோகடித்து ஆலயத்தை அகற்றுவதற்காக அல்ல, என்பதை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற உணர்வில் அவர்கள் புரிந்து நடந்து கொண்டிருக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில்,

கல்முனை மாநகரசபையின் பிரதிமுதல்வர் காத்தமுத்துகணேசன் மற்றும் உறுப்பினர் சுமித்திரா ஜெகதீசன் ஆகியோர், கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, சிரேஸ்ட உப தலைவர் ஞா. கிருஸ்ணபிள்ளை மற்றும் நிர்வாகச் செயலாளர் இரா. சங்கையா ஆகியோர் மீது அபாண்டமான பொய்களை ஊடகங்கள் வாயிலாக கூறியிருந்தார்கள்.

அதனால் அதன் உண்மைத்தன்மையை ஊடகங்களுக்கும் மற்றும் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த பின்னர் கல்முனை மாநகர சபையில் ஒரு குறிப்பிட்ட கட்சி பெரும்பாண்மையை பெறக் கோடிக்கணக்கான பணம் பெற்றுக்கொண்டு தான் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு தெரிவித்தது என்று வதந்தி பரப்பப்பட்டது.

ஒரு சில இணையதளங்கள் ஊடாகவும் முகநூல்கள் வாயிலாகவும் செய்திகள் பரப்பப்பட்டன.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் காத்தமுத்துகணேசன் ஊடாக கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் கோடிக்கணக்கான பணம் கைமாறியுள்ளது என நேரடியாகவே எங்களிடம் கேட்டார்கள்.

மேற்படி இரண்டு உறுப்பினர்களும் பணம் வாங்கினார்களா? இல்லையா? என்பது அவர்களுக்கும், ஆண்டவனுக்கும் மடடும் தான் தெரியும்.

ஆனால் எமது கட்சிக்கோ கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கோ அல்லது எனக்கோ எந்தவித பணமும் கொடுக்கவில்லை என்பதை இரண்டு உறுப்பினர்களும் ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஊடகங்களில் அவர்கள் உண்மைக்கு மாறாக பல கதைகள் கூறியிருந்தாலும், கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித பணமும் கொடுக்கவில்லை என்ற உண்மையை தெளிவாக அடித்துக் கூறி அந்த சம்பவத்தால் கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்து, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

அதற்காக நாம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பணம் வாங்கினார்களா? இல்லையா? என்பது இனி அவர்களின் தனிப்பட்ட விடயம். கட்சிக்கும் அதற்கும் எதுவித சம்மந்தமும் கிடையாது.

அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். கல்முனை மாநகர சபை உறுப்பினர்களாக மேற்படி உறுப்பினர்களை நியமனம் செய்யும் போது, தேர்தலில் போட்டியிட்ட ஏனையவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கும் பொருட்டு எனது பூரண சம்மதத்துடன் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கின்றேன் என்ற வாசகம் அடங்கிய கடிதத்தில் அவர்கள் கையொப்பமிட்ட பின்னரே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் அன்று வருகை தந்திருந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும் அவ்வாறே சத்தியப்பிரமாணும் செய்து கொண்டனர்.

அதற்கு அமைவாக சமீபத்தில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைமற்றும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்து புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.

இதனடிப்படையில் தான் கடந்த ஏப்ரல் மாதத்தில் நானும் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு சென்று அவர்கள் இருவரையும் அழைத்து மேற்படி இராஜினாமாக் கடிதங்களை கையளிக்கப் போகின்றோம்.

அதற்கு அமைவாக நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறிவிட்டு நீங்கள் முடிந்தால் எங்களை நீக்குங்கள் என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்கள்.

அன்றிலிருந்து கட்சியுடனான சகல தொடர்புகளையும் அவர்கள் துண்டித்து கொண்டதோடு மட்டுமல்லாமல் காத்தமுத்துகணேசன் கட்சியின் தலைமையைப் பற்றி நாகரீகமற்ற முறையில் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக மேற்கொண்டார்.

இருந்தும் நாங்கள் பொறுமைக் காத்தோம். இந்த சூழ்நிலையில் கல்முனைப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் தொடர்பான உண்ணாவிரதத்தின் போது, எமது கட்சியின் உறுப்பினர்கள் அவர்களிடம் சென்று இந்த சந்தர்ப்பத்திலாவது மாநகரசபையில் ஆளுந்தரப்பிற்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறும்படி அவர்களிடம் கேடடுள்ளார்கள்.

ஆனால் அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் கட்சியின் நலன் கருதி அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக செயலாளர் நாயகம் இலண்டணில் இருந்து அறிக்கை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதற்கு இவர்கள், செயலாளர் நாயகம் இலண்டனில் இருந்து வந்த பின்னர் விளக்கம் கேட்டிருக்கலாம். அவர்கள் அதை செய்ய தவறிவிட்டு கட்சியின் தலைமை மீதும் ஏனைய உறுப்பினர்கள் மீதும் சம்பவத்துடன் தொடர்பு இல்லாத விடயத்தை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியபடியால் தான்.

நாங்களும் உண்மை நிலையை தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநகர சபை முதல்வர், பிரதேச செயலகத்தில் அமைந்திருந்த கோவிலை அகற்றுவதற்காக நீதிமன்றத்தை நாடிய போதே, அவர்களிடம் அந்த விடயத்தில் முதல்வர் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் நீங்கள் கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என கட்சின் சகலமட்டத்தினரும் அவர்களிடம் வலியுறுத்தினோம்.

தமிழ் மக்களின் அபிவிருத்தி சம்மந்தமான விடயத்திற்குத் தான் ஆதரவு கொடுக்க கூறினோமே தவிர, கல்முனை வாழ் இந்துக்களின் மனதை நோகடித்து ஆலயத்தை அகற்றுவதற்காக அல்ல, என்பதை தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்ற உணர்வில் அவர்கள் புரிந்து நடந்து கொண்டிருக்க வேண்டும்.

தங்களுடன் கூட கலந்து ஆலோசிக்காமல் முதல்வர் ஆலயத்தை அகற்றுவதற்கு நீதிமன்றத்தை நாடிய போதே, உடனடியாக அவர்கள் தங்களின் ஆதரவை விலக்கி இருந்தால் மேற்குறிப்பிட்ட உறுப்பினர்களை நாங்கள் பாராட்டியுமிருப்போம், கோவில் பிரச்சினையும் ஒரு முடிவிற்கு வந்திருக்கும்.

1983ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் மேலும் ஆறு ஆண்டுகாலம் நீடித்த போது, பதவிகளை துச்சமென தூக்கி எறிந்து விட்டு வந்த தலைவர்களைக் கொண்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு, செயலாளர் நாயகத்தால் நியமனம் செய்யப்பட்ட இவர்கள் இப்படி பதவிமோகத்திற்கு ஆளாகிப்போனது வெட்கக்கேடான விடயம்.

அவர்களை விட மிக அதிளவான வாக்குகளைப் பெற்றவர்களை விடுத்து, பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில், கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் விசுவாசமாக செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் செயலாளர் நாயகத்தினால் நியமனம் செய்யப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் ஏதோ ஆகாயத்தில் இருந்து வந்து குதித்தது போல் கூறிக்கொள்கின்றார்கள். எது எப்படியோ செயலாளர் நாயகம் நாடு திரும்பியதும் முறைப்படி அவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.