விடுதலைப் புலிகள் தொடர்பில் தொடர்ந்தும் பேசுவேன்! ஆயுள் தண்டனை என்றாலும் ஏற்பேன்... வைகோ அதிரடி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நான் தொடர்ந்தும் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பாக பேசுவேன். இளைஞர்கள் மத்தியில் ஈழ விடுதலை தொடர்பான அத்தனையையும் விதைப்பேன் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோவிற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைகோ. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு பொலிஸ் நிலையத்தில் தேசத்துரோக வழக்கினை தமிழக அரசு பதிவு செய்தது.

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வைகோ, நான் ஈழ விடுதலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக பேசினேன். என்னை 19 மாதங்கள் சிறையில் அடைத்தனர். மேல்முறையீடு செய்தேன். அப்போது தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பில் பேசுவது தவறு அல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தார்கள்.

தற்போது இந்த வழக்கு மீண்டும் வந்த போது எனக்கு சிறைத் தண்டனை வழங்குவதாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நான் விடுதலைப் புலிகள் தொடர்பாக தொடர்ந்தும் பேசுவதாகவும், இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்தும் அவர்கள் தொடர்பான கருத்தை விதைப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

ஆம், நான் ஈழ விடுதலை தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன். ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசுவேன். இளைஞர்கள் மத்தியில் அதனைக் கொண்டு செல்வேன். ஆயுள் தண்டனையாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அதிரடியாக பதில் வழங்கியுள்ளார்.

இதேவேளை, தமிழக அரசு தொடர்ந்த தேச துரோக வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஜாமீன் வழங்கி தண்டனையை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

நீதிமன்றத்திற்கு நேரடியாக வருகை தந்த வைகோ, தனக்கான தீர்பினை இன்றே வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் ஓராண்டு கால சிறைத் தண்டையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அபராத தொகையை வைகோ உடனடியாக செலுத்தினார்.

இதையடுத்து வைகோவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை பரிசீலனை செய்த நீதிபதி, வைகோவின் மனுவை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.