கடும் விமர்சனத்துக்குரிய சம்பந்தரின் உரை

Report Print Tamilini in அரசியல்

தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாட்டில் இரா.சம்பந்தர் அவர்கள்; ஆயுதப் போராட்ட த்தை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிப் பரிசீலிக்க வேண்டிவரும் என்ற பொருள்பட ஆற்றிய உரை தொடர்பில் முகநூல்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வெளிநாட்டில் வாழ்ந்து விட்டு தற்போது யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கத்தோலிக்க மதகுரு ஒருவர் உட்பட சிலரை படைவீரர்கள் போல சித்திரித்து கேலிச்சித்திரங்கள் வெளியாகி உள்ளன.

இது தவிர, தமிழ் மக்கள் மத்தியிலும் இரா.சம்பந்தரின் உரை பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

எதற்காக சம்பந்தர் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார் என்ற கேள்விகளுக்கு பல்வேறு பதில்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடத் தயாராக இருப்பதுபோல காட்டிக் கொள்வதன் மூலம், தமிழ் இளை ஞர்களை மீண்டும் கைதுசெய்து சிறைகளில் அடைப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதி வேலையாகவே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் உரையாற்றினார் என்று கூறுவோரும்.

இரா.சம்பந்தரின் உரையானது, முன்னாள் போராளிகள் மீது படையினருக்குச் சந்தேக த்தை ஏற்படுத்த வைத்து, அவர்கள்மீது மீண்டும் விளக்கம் விசாரணை என்பவற்றை ஏற் படுத்தச் செய்து, வடக்குக் கிழக்குப் பகுதியை பதற்றமான சூழ்நிலையில் வைத்திருப்பதுதான் உள்ளார்ந்தம் என்று கூறுவோரும்.

இதுமட்டுமல்ல, சிறைகளில் அடைபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு விரும்புகின்ற அரசாங்கத்துக்கு உதவும் வகையிலேயே சம்பந்தர் மேற்கண்டவாறு உரையாற்றினார் என்று சிலாகிப்போரும் உளர்.

எதுஎவ்வாறாயினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவ்வாறானதொரு உரை யைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து.

இதை நாம் கூறும்போது, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் தனது உரையில் போராட்டம் வெடிக்கும் என்று கூறினாரே என்று யாரேனும் கேட்கலாம்.

ஆனால் அவ்வாறானதொரு கேள்வி தேவையில்லை. ஏனெனில் வழமையில் பாராளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆற்றுகின்ற உரையில் போராட்டம் வெடிக்கும் என்ற சொற்பிரயோகம் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

ஆகையால் மாவை சேனாதிராசா அவர்களால் கூறப்படும் போராட்டம் வெடிக்கும் என்ற உரை பெரிதான தாக்கத்தை ஏற்படுத்த மாட்டாது.

சிலவேளை போராட்டம் வெடிக்கும் என்று அவர் உரையாற்றாமல் விடுவாராக இருந்தால் அந்த உரை சிலவேளை சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் சம்பந்தர் ஆற்றிய உரை திட்டமிடப்பட்டது என்பதனால் அவரின் உரை கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

- Valampuri