புதிய கூட்டணியை ஏற்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணங்கவில்லை என்றால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கூட்டணியை ஏற்படுத்தும் தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இல்லை என்றால், இரண்டு தரப்புக்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அவசியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.
எந்த தரப்புக்கு பின்னால் செல்ல வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணியை ஏற்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக மகிந்த அமரவீர கடந்த செவ்வாய் கிழமை கூறியிருந்தார்.
எனினும் அப்படியான எந்த இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது.