நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகள்! ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை நாட்டுக்கு சேதத்தை ஏற்படுத்தும் எந்த இணக்கப்பாட்டையும் சர்வதேசத்துடன் ஏற்படுத்தி கொள்ள இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

தற்போது பலரிடையே நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சோபா, மில்லேனியம் சேலேஞ்ச் போன்ற உடன்படிக்கை பற்றி பேசப்படுகிறது.

எனினும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த உடன்படிக்கையிலும் கையெழுத்திட இடமளிக்க போவதில்லை.

சில வெளிநாட்டு சக்திகள் இலங்கை தங்களது மத்திய நிலையமாக மாற்றி முயற்சித்து வருகின்றன.

எந்த சக்தியாக இருந்தாலும் நாட்டுக்குள் நுழைந்து சவால் ஏற்படுத்தும் வகையில், அழுத்தங்களை கொடுக்கவும் நாட்டின் இறையாண்மையை அழிக்கவும் இடமளிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சோபா, மில்லேனியம் சேலேஞ்ச் ஆகிய இந்த உடன்படிக்கைகள் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு சம்பந்தமான உடன்படிக்கைகள் என்பதுடன் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திட வேண்டும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியை தாண்டி அரசாங்கத்தில் உள்ள வேறு எந்த தரப்பினராலும் இப்படியான உடன்படிக்கைகளில் கையெழுத்திட முடியாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.