பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதவர்கள் கூறும் கருத்துக்களுக்கு பொறுப்பு கூற முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டணியை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் 6 பிரதிநிதிகளை தவிர வேறு தரப்பினர் வெளியிடும் கருத்துக்களுக்கு பொறுப்புக் கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஏதாவது பிரச்சினை இருந்தால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் உள்ளது.

புதிய கூட்டணியை ஏற்படுத்த நடத்தும் இந்த பேச்சுவார்த்தைகள் மூன்று மாதங்களாக நடந்து வருகிறது.

பேச்சுவார்த்தைகளில் எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையில் பங்கேற்காத வெளியாட்கள் இது சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடும் போது, பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணியை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கலாநிதி ஜகத் வெள்ளவத்த ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers